உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில்ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த விழாவை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது. கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படுகிறது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர்.
இப்போட்டியில் விளையாட 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசும், இரண்டாம் வீரருக்கும், காளைக்கும் பைக் பரிசாக வழங்கப்படுகிறது.சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளேன். உரிய பாதுகாப்புடன் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் கவனமாக விளையாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உயிரிழப்புகள் இல்லாமல் நடத்துவதே குறிக்கோள்.