‘எப்ஸ்டீன் லீக்ஸ்’, ஜெஃப்ரி எப்ஸ்டீன்… உலகம் முழுவதும் பரபரப்பான பேசுபொருளாக இவை மாறியுள்ளன. யார் இந்த ஜெஃப்ரி எஸ்டீன்? அது என்ன ‘எப்ஸ்டீன் லீக்ஸ்’ என்ற ஆவல் பலர் மத்தியிலும் பரவியுள்ளது. ஜெஃப்ரி எப்ஸ்டீன் அமெரிக்காவில் பல பாலியல் குற்றச்சாட்டுகளில் பரபரப்பாக அடிபட்ட நபர். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோது சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னர் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன. அவர் தொடர்பான விசாரணையில் நீதிமன்றம் அறிந்துகொண்ட தகவல்களும் சீலிடப்பட்டு வைக்கப்பட்டன. அந்த வழக்கில் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிப்பட்டது அதற்கு ஒரு காரணம்.
ஆனால், அண்மையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாண நீதிபதியான லொரட்டா ப்ரெஸ்கே ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். “இனியும் அந்த வழக்கு விசாரணையில் இடம்பெற்ற முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் தொடர்பாக ரகசியம் காக்க வேண்டிய அவசியமில்லை. ஜனவரி 1-க்குப் பின்னர் படிப்படியாக விசாரணை விவரங்களை வெளியிடலாம்” என்றார். ஏனெனில், இந்த விசாரணை விவரத்தில் பிரின்ஸ் ஆண்ட்ரூ முதல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் வரை பலரது பெயர்களும் இடம்பெற்றுள்ளதால் ‘ஜெஃப்ரி லீக்ஸ்’ பரபரப்பாகப் பேசப்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார் அவர் மீதான வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது 2019 ஆகஸ்டில் அவர் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அத்துடன் எல்லாம் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், தற்போது இந்நாள், முன்னாள் பிரபலங்களை கலக்கம் கொள்ளச் செய்யும் வகையில் நீதிபதி உத்தரவு லீக்காகும் தகவல்களும் அமைந்துள்ளன.