இஸ்ரோ தலைவர் சோம்நாத், “புத்தாண்டு தொடங்கியது. எக்ஸ்போசாட் வெற்றிகரமாக விண்ணில் நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது” என்று தெரிவித்தார். இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.
என்ன செய்யும் எக்ஸ்போசாட்?- விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015-ம் ஆண்டில் அனுப்பப்பட்டது. இந்நிலையில், கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்வதற்காக எக்ஸ்போசாட் (XPoSat-X-ray Polarimeter Satellite) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. எக்ஸ்போசாட் 469 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகளாகும். இது பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. இதற்காக எக்ஸ்பெக்ட் (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ கிராபி), போலிக்ஸ் (எக்ஸ்ரே போலரி மீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.தொடர்ந்து இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு படிநிலையாக ராக்கெட்டை விண்ணில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.