ஆக்ஷன் படங்களில் விஜயகாந்த் பட்டையை கிளப்பிய போதிலும், ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அம்மன் கோயில் கிழக்காலே’ போன்ற படங்கள் பெண் ரசிகைகளை அவர் பக்கம் இழுப்பதற்கு பெரும் பங்காற்றின. அதிலும் 1984ம் ஆண்டு விஜயகாந்தின் பொற்காலம் என்றால் அது மிகையாகாது. அந்த ஆண்டில் அவர் நடித்த 18 படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திழுத்தன.
ஆக்ஷன், காமெடி, குடும்பம் என பல்வேறு வெரைட்டிகளில் கதகளி ஆடியவர், தமிழ்நாட்டு மக்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். அவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, மாநகரக் காவல் போன்றவை பெண்களை ஆக்ஷன் காட்சிகளை ரசித்து பார்க்க வைத்தது. சின்ன கவுண்டர் படத்தின் மூலம் பல தாய்மார்களின் மகனாகவும் பிறப்பெடுத்தார்.கிராமத்து நாயகனாகவும் சரி, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் நகரத்து இளைஞனாகவும் சரி, நாட்டை காப்பாற்ற போராடும் ராணுவ வீரனாகவும் சரி, எதற்கும் சளிக்காமல் தன்னை கனக்கச்சிதமாக பொறுத்திக் கொண்டதே, பெண்களை அவர்களது, சகோதரனாகவும், மகனாகவும், மனதிற்குப் பிடித்தவாரகவும் மாற்றியது. அந்த யுக்தியே ஒரு வீட்டின் வயதானவர் முதல் சிறுசு, பொடிசுகள் வரை அத்தனை பேரையும் கைப்பிடித்து விஜயகாந்தின் படங்களுக்கு கூட்டிச்சென்றது.