நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்கள், சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் அங்கு புகை மண்டலம் எழுந்தது. இதனால் அங்கிருந்த எம்பிக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். அத்துமீறிய இருவரும் வண்ணத்தை உமிழும் பொருளை வைத்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. வண்ணத்தை உமிழும் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய இருவரால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் மக்களவையில் நுழைய முயன்ற இருவரை தடுத்துநிறுத்தி போலீசார் கைது செய்தனர்.
அதேவேளையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது. அவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட இருவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பார்வையாளராக உள்ளே நுழைய யார் பரிந்துரை செய்தது? மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. பிற புலனாய்வு முகமைகளும் அவர்களிடம் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று நடந்த அத்துமீறல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP