சென்னையில் அதிகனமழை ஓய்ந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் மக்கள் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்களுக்கு பலத்த நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கூடுதல் நிதிச் சுமை, வருவாய் இழப்பு என இரட்டை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
இரண்டு சக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் நம்மை மூச்சிறைக்க வைத்தது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, அதிகாரிகள் என யாரும் உதவி செய்யவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றாலும், குடிநீர், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதாக தெரிகிறது. வடசென்னை பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தவில்லை. உணவு, குடிநீர், மின்சாரம், பால் இல்லாமல் நான்கு நாட்களாக மக்கள் பரிதவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்னும் மழை நீர் வடியாததால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் ஏற்கனவே கழிவு நீர் கலந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெய்யும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெட்ரோலியம் தொழிற்சாலைகளை மழைநீர் சூழ்ந்திருக்கும் நிலையில், அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறி வேறு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்புகளும் வரலாம் எனக் கூறப்படுகிறது.