சென்னை அடையாறு – ஆற்றில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் 40,000 கனஅடி தண்ணீர் பாய்வதால், வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், சைதாப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் கரையோர வீடுகள், கட்டிடங்கள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி.மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளித்தது. இதனிடையே செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
அடையாறு ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, காவல் துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மேலும், அடையாற்றின் கரையோர பகுதிகளான ஈக்காட்டுத்தாங்கல், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், பல்வேறு இடங்களில் இருந்துவரும் நீர்வரத்தால், அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாற்றில் 40,000 கனஅடி தண்ணீர் பாய்ந்து செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.