தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி உள்ளிட்ட வட்டங்களில் விவசாயிகள் பலர் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் கொத்தவரை சாகுபடியும் அடங்கும். நார்ச்சத்து, கால்சியம் சத்து உள்ளிட்ட நன்மை பயக்கும் பல சத்துக்குள் கொத்தவரையில் நிறைந்துள்ளன.
கொத்தவரங்காய் விலையில் பெரிய அளவில் விலை சரிவு மற்றும் உயர்வு இல்லாமல் சீரான விலையிலேயே விற்பனையாகி வரும். சில நேரங்களில் மட்டும் விலை அதிகரிக்கும். அதன்படி, கடந்த சில நாட்களாக கொத்தவரை விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த அக்டோபர் 31-ம் தேதி கொத்தவரை ஒரு கிலோ ரூ.16 வரை விற்பனை ஆனது. வெளிச் சந்தைகளில் கூடுதலாக கிலோவுக்கு ரூ.5 வரை அதிகமாக விற்பனையானது.
நவம்பர் 13-ம் தேதி வரை ஓரிரு ரூபாய் விலையேற்றத்துடன் விற்பனையாகி வந்த நிலையில் கடந்த 14-ம் தேதி கிலோ ரூ.30-ஐ தொட்டது. பின்னர் படிப்படியாக விலை அதிகரித்து, கடந்த 30-ம் தேதி கிலோ ரூ.40 ஆக உயர்ந்தது. 1-ம் தேதி கிலோ ரூ.42-க்கும், நேற்று கிலோ ரூ.44-க்கும் விற்பனை ஆனது. வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.50-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது. இதனால், கொத்தவரை சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து, மாணிக்கம் என்ற விவசாயி கூறியது: கொத்தவரை, முள்ளங்கி ஆகிய இரு காய்களும் ஆண்டின் பெரும்பகுதி நாட்கள் சராசரி விலையில் மட்டுமே விற்பனையாகும். இதனால் தான் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் இவ்விரு காய்கறிகளையும் தங்கள் நிலங்களில் சிறிய பரப்பளவில் மட்டுமே பயிரிட்டு வளர்ப்போம்.