சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ நேற்று வெளியானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் “சுமார் 32,000 பெண்களின்” பின்னணியில் உள்ள நிகழ்வுகளை “கண்டுபிடிப்பதாக” இப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை தடை செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட மறுத்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் உள்ள 13 மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்களில் மட்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியானது. திரையரங்கங்களின் முன்னால் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்த நிலையில், இன்று (மே 07) முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தொடர் போராட்டம் மற்றும் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாதது, எதிர்மறை விமர்சனங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேரள மாநிலத்திலும் பல்வேறு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் இப்படத்தின் காட்சிகளை நேற்று ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.