காசா பகுதியின் புனரமைப்புக்கு உதவுவேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருதரப்பிலும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில பிணைக் கைதிகளை விடுவிக்கத் தோதாக போர் நிறுத்தம் இன்னும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சூழலில் காசா புனரமைப்புக்கு உதவுவேன் என மஸ்க் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் மஸ்க் இடையிலான கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இது நேரலையில் வெளியானது. “காசா வாழ் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்றால் ஹமாஸை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஜெர்மனி மற்றும் ஜப்பானில் செய்தது போல நச்சு நிறைந்த ஆட்சியை அகற்ற வேண்டும்” என நெதன்யாகு, மஸ்க் வசம் தெரிவித்தார். “அதை விட்டால் வேற சாய்ஸ் இல்லை” என மஸ்க் அதற்கு பதில் கொடுத்துள்ளார். “படுகொலை செய்யும் நோக்கில் இயங்குபவர்களையும், தீவிரவாதிகளையும் வெளியேற்றுவதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் எஞ்சியுள்ள மக்களுக்கு உதவ வேண்டும். போருக்கு பின் காசா புனரமைப்புக்கு உதவுவேன்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP