அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய எல்லையைக் கடந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் பதிலடியாக தாக்குதலை தொடர்ந்தது. இந்த தாக்குதலில் பல அப்பாவி குடிமக்கள் , குழந்தைகள் , பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர்.
நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர். வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் – ஹமாஸ் போரின் 2-ம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவிக்கிறார். இந்நிலையில் இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 3,320 பேர் குழந்தைகள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,000-ஐ கடந்துள்ளது. போரில் பெண்களும், குழந்தைகளும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அமைப்பும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகின்றது.
கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினர், அந்தப் பகுதியில் பல்வேறு இடங்களில் ஹமாஸ் அமைப்பினருடன் மோதலில் ஈடுபட்டனர். பிராந்தியத்தின் தலைநகரான காஸாவில் நேற்று கடுமையான சண்டை நடந்தது.
இந்த நிலையில் வடக்கு காஸாவிலுள்ள ஜபாலிலா அகதிகள் முகாமில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 50 அகதிகள் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவிலுள்ள 8 அகதிகளில் முகாம்களில் மிகப் பெரிய அகதிகள் முகாம் ஜபாலிலா முகாமாகும். இதில் 1.16 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் வசித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP