இஸ்ரேல் தொடர்ந்து 21-வது நாளாக, நேற்று காஸா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையான போர் காரணமான காஸா பகுதியில் இணையத்தை முடக்கியதால், பாலஸ்தீனிய எல்லைக்குள் இருக்கும் 23 லட்சம் மக்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.காஸாவின் ஹமாஸ் அரசின் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல் படை தாக்குதலில் இதுவரை 7,300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது. அவர்களில் 60% க்கும் அதிகமானோர் சிறார்கள் மற்றும் பெண்கள். அக்டோபர் 7-ம் தேதி தெற்கு இஸ்ரேலில் தரை மற்றும் வான் வழியாக ஊடுருவிய ஹமாஸ் அமைப்பை முற்றிலும் நிர்மூலமாக்குவதை இலக்காக வைத்திருக்கும் இஸ்ரேலிய படைகள், காஸா பகுதியை கடுமையாக தாக்கி வருகிறது.
நியூயார்க் நகரின் புகழ் பெற்ற கிராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முக்கிய வளாகத்தில் நேற்று மாலை கூட்ட நெரிசல் அதிகம் இருந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காஸா பகுதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தியதால் உடனடியாக போரை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பலரும் இந்த கருத்தை வலியுறுத்தும் பதாகைகளை வைத்திருந்தனர்.
யூதர்கள் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் என்று கறுப்பு நிற டி-சர்ட்களை அணிந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் குறைந்தது 200 பேரை நியூயார்க் காவல் துறை அதிகாரிகள் கைது செய்து ரயில் நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.
அனைவருக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். சில எதிர்ப்பாளர்கள் ரயில்கள் புறப்படும் நேரங்களைப் பட்டியலிடும் போர்டுகளுக்கு முன்னால் உள்ள கல் திட்டுகளில் பதாகைகளை வைத்திருந்தனர். இந்த போராட்டம் காரணமாக, கிராண்ட் சென்டிரல் ரயில் நிலையத்துக்கு மாற்றாக பயணிகள் பென் ரயில் நிலையத்தை பயன்படுத்துமாறு பெருநகர போக்குவரத்து ஆணையம் கேட்டுக் கொண்டது.
உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறையினரால் கலைக்கப்பட்டதையடுத்து, வெளிப்பகுதிகளிலிருந்து குரல் கொடுத்தபடி இருந்த போராட்டக்காரர்கள் அப்படியே தெருக்கள் வழியாக வெளியேறினர். நூற்றுக்கணக்கான யூதர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் கிராண்ட் சென்டிரல் ரயில் நிலையத்தில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக ஏராளமானோர் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.
NEWS EDITOR : RP