சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா’ வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர் மாளிகை தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, ரவுடி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வந்தது எப்படி என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளில் கருக்கா வினோத் மஞ்சள் சட்டை அணிந்தபடி, கையில் பையுடன் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை வெளியிட்டு சென்னை காவல் துறை ஆணையர் சந்தீப் ரத்தோர் பேசுகையில், “கருக்கா வினோத் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கமான குற்றவாளி. தேனாம்பேட்டையில் இருந்து சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி தன்னந்தனியாக பாதசாரி போல நடந்து வந்தது சிசிடிவி மூலமாக தெரிகிறது. ஆனால் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய கருக்கா வினோத் முயற்சிக்கவில்லை. தான் கொண்டுவந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட 4 பாட்டில்களில் இரண்டு பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் எதிர்புறத்தில் இருந்து எரிய முற்பட்டபோது அவை ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள பேரிகேட் அருகே விழுந்தன. மாறாக, ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை.
மேலும், குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்லவும் இல்லை, ஆளுநர் மாளிகை ஊழியர்களால் அவர் பிடிக்கப்படவும் இல்லை. வினோத் தனியாகதான் வந்துள்ளார். அவருடன் யாரும் வரவில்லை. சென்னை பெருநகர காவல்துறை காவலர்கள் 5 பேரால் உடனடியாக பிடிக்கப்பட்டு கிண்டி காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுதான் நடந்த சம்பவம். ஆனால், ஆளுநர் மாளிகை தரப்பில் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில் ‘பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசியதாகவும், வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியதாகவும் சொல்லப்பட்டுள்ளது’. அப்படி நடக்கவில்லை.
போலீஸார் தரப்பில்தான் முதலில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். முதல்கட்ட விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணையில்தான் குற்றவாளியுடன் வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா, அரசியல் தொடர்புள்ளதா என்பதை கூற முடியும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளுநர் நேரம் கொடுக்கும்பட்சத்தில் சிசிடிவி ஆதாரங்களுடன் விளக்கமளிப்பேன்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கடந்த ஏப்ரலில் ஆளுநர் மயிலாடுதுறை சென்றபோது கருப்புக் கொடி காட்டப்பட்ட சம்பவத்தில் ஆளுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கம் அளித்த ஏடிஜிபி வருண், “25-ம் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரில் மயிலாடுதுறை தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. ‘மயிலாடுதுறையில் ஆளுநர் கல் மற்றும் கம்புகள் கொண்டு தாக்கப்பட்டதாகவும், ராஜ்பவன் சார்பில் இதற்கு புகார் கொடுத்தும் காவல் துறை எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றும், நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஆளுநரின் கான்வாய் செல்லும்போது எந்தவித தாக்குதலும் இல்லை. தனியார் வாகனங்கள் செல்லும்போது மட்டுமே ஒரேயொரு கருப்புக் கொடி வீசப்பட்டது. மேலும், ஏப்ரல் 18-ல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அது தவறான செய்தி. ஏப்ரல் 19 காலையில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதேபோல் ராஜ் பவன் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டதாகவும் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதுவும் தவறு. ஏப்ரல் 19 மாலையே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 73 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 53 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளோம். எனவே, ஆளுநர் மயிலாடுதுறையில் உடல் ரீதியாக கற்களை கொண்டும், கம்புகளை கொண்டும் தாக்கப்பட்டதாக கூறுவது பொய்” என விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், “தமிழகம் பாதுகாப்பான இடம். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை. இதனை நாங்கள் சொல்லவில்லை. பல தனிப்பட்ட சர்வேக்கள் சொல்லியுள்ளன. இன்றைய தேதியில் தமிழ்நாடும், சென்னையின் அமைதியான இடங்கள். சாதாரண மக்களில் இருந்து அனவைருக்கும் தமிழக காவல் துறை பாதுகாப்பு வழங்கி வருகிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . தமிழக காவல் துறையை பொறுத்தவரை சட்டம் – ஒழுங்குக்கே முன்னுரிமை எப்போதும் கொடுக்கப்பட்டு வருகிறது.
NEWS EDITOR : RP