கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடகா முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வந்ததை அடுத்து, கல்வி நிறுவனங்களில் சீருடையை தவிர பிற ஆடைகள் அணியக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாணவிகள் ஹிஜாப் அணியலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர், “ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதும் விவகாரத்தில் சிலர் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும் மாணவிகள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணிந்து தேர்வு எழுதலாம்” என்று தெரிவித்தார். சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். தற்போது அனைத்து தரப்பினரின் சுதந்திரத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP