காஸா ஆக்கிரமிப்பு பகுதியிலிருந்து இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த 7-ம் தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமார் 1,000 ஹமாஸ் அமைப்பினர், சுமார் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனர். இது தவிர இஸ்ரேல் ராணுவத்தினர், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 12 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் அந்த மிகச் சிறிய பகுதிக்கு மின்சார விநியோகத்தைத் துண்டித்த இஸ்ரேல் அரசு, உணவு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்ல முடியாத வகையில் அந்தப் பகுதியை முற்றுகையிட்டுள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
“அல்-ஆஹ்லி மருத்துவமனை தாக்குதலுக்குப் பிறகும், காஸா பகுதியில் விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 17-ம் தேதி இரவில் நிறுத்தப்பட்டிருந்த விமானத் தாக்குதல், நேற்று அதிகாலை மீண்டும் தொடங்கியது. காஸாவின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு காஸா பகுதியிலுள்ள ஜபாலியா நகரின் அல்-காசாசிப், ஹலீமா அல்-சாடியா ஆகிய பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 37 போ் உயிரிழந்தனர்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஹ்லி மருத்துவமனை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மேற்குக் கரை பகுதியில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது 2 சிறார்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றனர். இத்துடன், இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்திய 61 பேர் அந்த நாட்டுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களில் சுமார் 600 போ் காயமடைந்தனர்.
காஸா பகுதியில் நடைபெற்று வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தாக்குதல்களில் இதுவரை 3,473 போ் உயிரிழந்துள்ளனர், சுமார் 12,500 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவா்களில் அல்-ஆஹ்லி மருத்துவமனை தாக்குதலில் இறந்த 471 பேரும் அடங்குவர்.
NEWS EDITOR : RP