இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர் 11 நாளாக தொடர்கிறது. காஸா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராகியுள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து குண்டுமழை பொழிந்து வருகிறது. இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் இதுவரை 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாக பாலஸ்தீனிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது அவர் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என்பதை பைடன் எடுத்துரைப்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் உருவாகும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்தொலைஹியான் எச்சரித்துள்ளார். காஸாவை ஆக்கிரமிக்கும் இஸ்ரேல் அங்கே போர்க் குற்றங்களை நிகழ்த்தி வருகிறது என்று கூறிய அவர், இது வேறு சில பகுதிகளில் மோதல்கள் வெடிக்கத் தூண்டும் என்று குறிப்பிட்டார். இதைத் தடுப்பது இஸ்ரேலின் கைகளில்தான் உள்ளது என்றும் இஸ்ரேல் உடனடியாக காசா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனிடையே இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையில் சிக்கியுள்ள காசாவில் இன்னும் 24 மணி நேரத்துக்குத் தேவையான எரிபொருள் மற்றும் மின்சாரம் மட்டுமே இருப்பதாக உலக நலவாழ்வு அமைப்பு எச்சரித்துள்ளது.
NEWS EDITOR : RP