ஆழியாறு ஆற்று நீரை பழமைமிக்க 5 ஆயக்கட்டு வாய்க்கால்கள் மூலம் வயல்களில் பாய்ச்சி, குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவித்த ஆனைமலை கரவெளியின் நெல் சாகுபடி நடந்த வயல்வெளிகள், தற்போது மாற்று பயிர்களுக்கு தயார்படுத்தப்படுகின்றன. பள்ளி விளங்கால், வடக்கலூர் அம்மன் வாய்க்கால் வயல் பகுதியில் கடந்த சில போகங்களாக நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லாமல் இருந்த விவசாயிகள், மாற்றுப்பயிராக இஞ்சியை தேர்ந்தெடுத்து லாபம் ஈட்ட தொடங்கியுள்ளனர்.
இது குறித்து நெல் விவசாயிகள் கூறும்போது, “ஆனைமலை பகுதியில் தற்போது நெல் விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. 6,400 ஏக்கர் பரப்பளவில் நடந்த நெல் சாகுபடி தற்போது சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவுக்கு குறுகிவிட்டது. கொள்முதல் நிலையம் மட்டும்அரசு ஏற்படுத்தி கொடுத்தால் போதாது. நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
நெல்லில் மகசூல் கிடைத்தாலும், வேலையாட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு, அறுவடை இயந்திரங்கள் கிடைக்காமை போன்றவற்றால் இழப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டம் போன்றவற்றால் நெல் பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகள் இஞ்சிக்கு மாறிவருகின்றனர்” என்றனர்.
தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கடல் மட்டத்திலிருந்து சுமார்1,500 மீட்டர் உயரம் வரையுள்ள ஈரப்பதமுள்ள உஷ்ண மண்டலப் பகுதிகளில், நல்ல வடிகால் வசதியுள்ள, களிமண் கலந்தமண்ணில் நன்கு வளரும் தன்மையுடையது மலைப்பயிர் இஞ்சி.
ஆண்டு முழுவதும் தேவையுள்ள பொருள் என்பதால் அதன் விற்பனையில் பிரச்சினை இருக்காது. தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சமவெளிப் பகுதியில் இஞ்சி சாகுபடி நடந்து வருகிறது. இஞ்சியை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக விற்பனைசெய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என்பதால் விவசாயிகள் இஞ்சி பயிரிடுவதில்ஆர்வம் காட்டி வருகின்றனர்” என்றனர்.
NEWS EDITOR : RP