தமிழில் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தி நடிகர் நானாபடேகர் மீது, மீ டூவில் புகார் கூறியிருந்தார். ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் நடித்தபோது நானா படேகர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு பதிலாக ராக்கி சாவந்த் நடனமாடியிருந்தார்.
நானா படேகர் மீது தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து தனுஸ்ரீ தத்தாவுக்கும், ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவானது. இருவரும் அடிக்கடி புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஓஷிவாரா போலீஸ் நிலையத்தில் புகார் கூறியிருந்தார்.இதுபற்றி தனுஸ்ரீ கூறும்போது, “நான் மீ டூ புகார் கொடுத்தபிறகு என் மீது அவர் தொடுத்த உளவியல் ரீதியான தாக்குதலுக்கு எதிராக இந்தப் புகாரை கொடுத்துள்ளேன். பொய்யான தகவல்களைக் கூறி என் நற்பெயரை அழித்துவிட்டார். இனி அவர் தப்ப முடியாது. அனைத்து ஆதாரங்களையும் இணைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP