திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதி, திருவண்ணாமலை – பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்.15) காலை காரும், லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் படுகாயமடைந்து திருவண்ணாமலை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன், என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
NEWS EDITOR : RP