பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என பொதுமக்களுக்கு இஸ்ரேல் கெடு விடுத்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், காசா மீது தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும், எனவே காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மக்கள் இஸ்ரேல் ராணுவத்திற்கு அஞ்ச வேண்டாம் என்றும், துணிச்சலுடன் செயல்படுங்கள் என்றும் ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காசா மக்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். காசா பகுதிக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டது. இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP