காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் வீச்சு..!!

Spread the love

பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து காசாவில் ஹமாஸ் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மக்கள்தொகை அதிகம் உள்ள காசா பகுதிகளில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பல புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

பூமியில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக காசா சொல்லப்படுவதுண்டு. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சுமார் 362 சதுர கிலோமீட்டர் மட்டுமே உள்ள காசா நிலப்பரப்பில் நெரிசலில் வசிக்கின்றனர். இதனிடையேதான், காசாவின் நெரிசலான இடங்களை குறிவைத்து வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 பாஸ்பரஸ் குண்டு என்பது வென் பாஸ்பரஸால் ஆனது. வெள்ளை நிறம் மற்றும் சில நேரங்களில் அது வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். இவை பூண்டின் வாசனையைப் பரப்பும் மெழுகுப் பொருள். அது, ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொண்டவுடன் எரியத் தொடங்குகிறது. இந்த குண்டுகள் வெடித்த பிறகு, உடனடியாக வெப்பநிலை 800 டிகிரியை எட்டும் என்று மதிப்பிடப்படுகிறது.

வெட்டவெளியில் பாஸ்பரஸ் குண்டு வீசப்படும்பட்சத்தில், அது நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பரவும். வெடித்துச் சிதறும்போது மிக அடர்த்தியான வெண் புகை மண்டலத்தை உருவாக்கும். இதனால் தாக்குதல் நடத்தும் படைகளுக்கு தற்காப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. வெள்ளை பாஸ்பரஸ் தரையில் வேகமாக படர்ந்து விரைவாக தீயை ஏற்படுத்தும். இந்த வகை குண்டுகளை ஆள்நடமாட்டம் இல்லாத ஓபன் ஸ்பேஸ் வகையறா பகுதிகளில் பயன்படுத்த மட்டுமே ஐ.நா. அனுமதிக்கிறது.

இந்த குண்டுகள் மக்கள் மீது விழுந்தால் தோலில் தீக்காயங்கள் ஏற்படுகின்றன. குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகின்றன. இந்தப் புகையை சுவாசிப்பதால் புற்றுநோய், குறிப்பாக ரத்தப் புற்றுநோய் ஏற்படலாம். மேலும், மனிதர்கள் சிலசமயங்களில் இறப்பை தழுவுவது மட்டுமல்ல, தீ தோலில் சிறிதளவு விழுந்தாலும் திசு மற்றும் எலும்பில் ஆழமாக ஊடுருவி கடுமையான தீக்காயங்களை ஏற்படுத்துவதுடன் உறுப்புகளை சிதைக்கும் வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போர்களில் பாஸ்பரஸ் பயன்பாடு: 1800-களில் ஃபெனியன் என அழைக்கப்படும் ஐரிஷ் படைகள் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இந்த வகையான குண்டுகளை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனை அப்போது “ஃபெனியன் தீ” என்றும் கூறியுள்ளனர். இரண்டு உலகப் போர்களிலும் பிரிட்டிஷ் ராணுவம் இதைப் பயன்படுத்தியது. ஈராக் படையெடுப்பின்போது பல்லூஜா நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் இந்த வகையான குண்டுகளை உபயோகித்துள்ளது.

இஸ்ரேல் இப்போது மட்டுமல்ல, 2006 லெபனான் போரின் போது ஹிஸ்புல்லா இயக்கத்துக்கு எதிராக பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டது. மேலும், 2008-09 காசா போரின்போதும் வெள்ளை பாஸ்பரஸை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்தியதாக பல மனித உரிமைகள் குழுக்கள் குற்றம்சுமத்தி இருந்தன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இவ்வகை குண்டுகளை ஒருமுறை பயன்படுத்தியுள்ளனர். சிரிய போரிலும் இந்தக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

பொதுமக்கள் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. இந்த வகை குண்டுகளை, சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட நிலையில், அதே குற்றச்சாட்டு தற்போது இஸ்ரேலும் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது நடத்தி வரும் கடும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீன நாட்டு மக்கள் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். இதனிடையே, பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 1.20 லட்சம் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர்.

காசா மீது பெரும் தாக்குதலை இஸ்ரேல் படைகள் திங்கள்கிழமை மேற்கொண்டன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் ராணுவம் கொண்டு வந்துள்ளது. “காசா பகுதி, தெற்கு எல்லையோரப் பகுதிகளில் நாங்கள் பெரும் தாக்குதலை நடத்தினோம். இதன்மூலம் காசா பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு எரிபொருள், உணவு, மின்சார வசதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு நாங்கள் மனிதர்களோடு போரிடவில்லை.அதற்கு ஏற்றவாறு நாங்கள் செயல்படுகிறோம். காசா முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதை இப்போது அறிவிக்கிறோம்” என்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்திருந்தார்.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram