நாட்டில் விற்பனை செய்யப்படும் கணினி, லேப்டாப், டேப்லெட் ஆகிய மின்னணு சாதனங்களில் 90 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் 58 சதவீதம் சீனாவை சேர்ந்தவை. இந்நிலையில், உள்நாட்டிலேயே மின்னணு சாதனங்களை தயாரிக்கும் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த சூழலில் கணினி, லேப்டாப், டேப்லெட் ஆகிய 7 மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. இதுதொடர்பாக மத்திய வணிக, தொழில் துறை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
இந்த தடையுத்தரவால் இந்தியாவில் மின்னணு சாதனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று தொழில் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து மின்னணு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் தடையுத்தரவு அமலுக்கு வரும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்தது. இந்த சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே கணினி, லேப்டாப் உற்பத்தி ஆலைகளை தொடங்க முன்வந்துள்ளன. இதன்படி அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் தனது குரோம்புக் லேப்டாப்புகளை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.
இதுதொடர்பாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறும்போது, “எச்பி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் குரோம்புக் லேப்டாப்புகளை தயாரிக்க உள்ளோம். முதல்முறையாக இந்தியாவில் குரோம்புக் தயாரிக்கப்பட உள்ளது. இதன்மூலம் இந்திய மாணவர்களுக்கு குறைந்த விலையில் குரோம்புக் கிடைக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP