தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வ்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் ஆளுநர் ஆர்.என். ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக இது குறித்து கடந்த 24-ம் தேதி ஒலிபரப்பான 105-வது `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், “காந்தி ஜெயந்தியன்று நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் தூய்மை இயக்கம் வேகம் பெற்றிருக்கிறது. `மனதின் குரல்’ வாயிலாக நாட்டு மக்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக். 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நாடு தழுவிய தூய்மை இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதற்கு நேரம் ஒதுக்கி, தூய்மை இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன்.
உங்கள் தெருவில், அக்கம்பக்கத்தில், பூங்காவில், நதியில், குளத்தில், ஏரியில் அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் நடைபெறும் தூய்மை இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் அமுத நீர்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ, அங்கு கண்டிப்பாக தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்த தூய்மை இயக்கமே, காந்தியடிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி” என்று தெரிவித்தார்.
பிரதமரின் இந்த அழைப்பை ஏற்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று தூய்மைப் பணிகள் நடைபெற்றன. குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலைகளில் கிடைந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஹரியானாவின் குருகிராம் நகரில் தூய்மைப் பணியை மேற்கொண்டார். தூய்மைப் பணியாளர்கள் அணியும் சீருடையை அணிந்து கொண்டு குப்பைகளைப் பெருக்கி வீதியை அவர் சுத்தம் செய்தார்.
NEWS EDITOR : RP