விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள்,பருத்தியிலிருந்து கொட்டையை பிரித்தெடுக்கும் ஜின்னிங் ஆலைகள், கழிவு பஞ்சை சுத்திகரிக்கும் வில்லோ ஆலைகள்,பஞ்சில் இருந்து பருமனான நூல் தயாரிக்கும் ஆலைகள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளை நம்பியே நேரடியாகவும்,மறைமுகமாகவும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளை ஒப்ப்டுகையில் தற்போதைய மின் கட்டணம் 430 விழுக்காடு வரையில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பீக் ஹவர்ஸ் என்ற சொல்லக்கூடிய வேலை அதிகமாக இருக்கக்கூடிய நேரங்களில் மின்சார கட்டணம் இரு மடங்கு அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் தற்போதைய காலக்கட்டத்தில் நூற்பாலை சார்ந்த தொழில்கள் நலிவடைந்து வருகிறது எனவும் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆலை உரிமையாளர்கள் நூற்பாலை மற்றும் அதன் சார்ந்த தொழில்களை காப்பற்றக்கோரி நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆலையின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்களுக்கு கட்டாயமாக ஒரு யூனிட்டுக்கு 1.53 பைசா வசூல் செய்வதை நிறுத்தக்கோரியும் இப்போராட்டத்தில் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது. மதுரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டகாரர்கள் நேரு சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஒரு நாள் போராட்டத்தின் காரணமாக அரசுக்கு 1கோடி வரையில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP