இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் கிரிக்கெட் நேற்று (செப்.25) தங்கம் வென்றது. இந்த சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தீவிர ரசிகரான சீனாவை சேர்ந்த வி ஜூன்யூ, இந்தியா – இலங்கை இடையிலான இறுதிப் போட்டியை பார்க்க மைதானத்துக்கு வந்திருந்தார். அவர் எதிர்பார்த்தது போலவே இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 46 ரன்களை ஸ்மிருதி எடுத்தார்.
அப்போது மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த வி ஜூன்யூ, ‘மந்தனா தெய்வம்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடும் வகையில் பதாகை ஒன்றை கையில் ஏந்தி நின்றார். அது பரவலான கவனத்தை பெற்றுள்ளது. “நான், ஸ்மிருதியின் ஆட்டத்துக்கு தீவிர ரசிகன். அவர் நல்ல ரிதத்தில் பேட் செய்வதை பார்க்க அற்புதமாக இருக்கும். அவர் எங்கள் நாட்டில் பேட் செய்வதை நேரடியாக பார்க்கும் வகையில் இங்கு வந்துள்ளேன். மந்தனா ஆடுவதை பார்க்க எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம். அவரது ஆட்டத்தை நெடு நாட்களாக தவறாமல் பார்த்து வருகிறேன்” என 25 வயதான வி ஜூன்யூ தெரிவித்தார்.
NEWS EDITOR : RP