சென்னை: ‘புதுச்சேரி உள்பட, 22 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். வரும் 7, 8ம் தேதிகளில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வளி மண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும், கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்துள்ளது. நிலப் பகுதியிலும் ஈரப்பதத்தின் அளவு குவிந்துள்ளதால், மாநிலம் முழுதும் மழைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது.
மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. 60 இடங்களில் கன மழையும், 13 இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது; மற்ற இடங்களில், மிதமான மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக, கடலுார் மாவட்டம் வானமாதேவியில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. சங்கரி துர்கம், 17; அதிராம்பட்டினம், 15; சாத்துார், 14; திருச்செங்கோடு, திருக்காட்டுப்பள்ளி, 13; எடப்பாடி, சின்கோனா,மகாபலிபுரம், 12 செ.மீ., மழை பெய்துள்ளது.
நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சி,கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார், அரியலுார், பெரம்பலுார்,மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், இன்று கன மழை பெய்யும்.
மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.