மக்களவை மற்றும் மாநிலங்களவையின் மொத்தமுள்ள 776 எம்பிக்களில் 763 பேர் தங்கள் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ள தகவல்களின் அடிப்படையில், பல்வேறு புள்ளி விவரங்களை ஏடிஆர் அமைப்பு திரட்டியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 40% எம்பிக்கள் (306 பேர்) மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 25% (194 பேர்) எம்பிக்கள் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குற்ற வழக்குள்ள எம்பிக்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் கேரளா 79 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் பிஹார் உள்ளது. 57 சதவீதத்துடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. தெலங்கானா 4ம் இடத்திலும், டெல்லி 5ம் இடத்திலும் உள்ளன. கட்சி ரீதியாகப் பார்க்கும்போது, திரிணாமூல் காங்கிரஸ் முதலிடத்திலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் இரண்டம் இடத்திலும், பாஜக மூன்றாம் இடத்திலும் உள்ளன.தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் 16 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 6,136 கோடி. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் 31 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4,766 கோடி. காங்கிரஸ் கட்சியின் 81 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 3,169 கோடி. ஆம் ஆத்மி கட்சியின் 11 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,318 கோடி.
எம்பிக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 38.33 கோடி. மொத்த எம்பிக்களில் 7% பேர் அதாவது 53 பேர் பெரும் பணக்காரர்கள். அதிக சொத்துள்ள எம்பிக்களைக் கொண்டுள்ள மாநிலங்களில் தெலங்கானா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசமும், பஞ்சாப் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 763 எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 29,251 கோடி. இதில், 385 பாஜக எம்பிக்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7,051 கோடி.
NEWS EDITOR : RP