உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில் அட்னான் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அந்த இளம் பெண், அட்னான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகவும், அதன் காரணமாகவே அவரோடு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது தான் கருவுற்றிருப்பதாகவும், ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.கைது செய்யப்பட்ட அட்னான் ஜாமீன் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சித்தார்த், அட்னானுக்கு ஜாமீன் அளித்தார். அப்போது தனது உத்தரவில் அவர் கூறியதாவது: “இந்தியாவில் திருமண அமைப்பை அழிக்க திட்டமிட்ட ரீதியில் முயற்சி நடக்கிறது. பாதுகாப்பு, சமூக அங்கீகாரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை திருமண அமைப்பு ஒருவருக்கு வழங்குகிறது. ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கையில் இவை கிடைக்காது.குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை துணையை மாற்றுவது என்ற மிருகத்தனமான கருத்து நிலையான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமாகக் கருத முடியாது.திருமண உறவில் துணைக்கு துரோகம் செய்வதும், திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருப்பதும் முற்போக்கு சமுதாயத்தின் அறிகுறிகளாகக் காட்டப்படுகின்றன. இத்தகைய தத்துவம் அதிகரித்து வருவதால், இதன் நீண்டகால விளைவுகளை அறியாமல் இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்” என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடுத்தர வர்க்கம் முன்னிறுத்தும் ஒழுக்கத்தை புறக்கணிக்க முடியாது. வளர்ச்சியடைந்த நாடுகள் என்று அழைக்கப்படும் பல நாடுகளில், திருமண அமைப்பை பாதுகாப்பது பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. நமது நாட்டில் திருமண அமைப்பு வழக்கற்றுப் போன பிறகுதான் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப் சாதாரணமாகக் கருதப்படும். இதுபோன்ற ஒரு கலாசாரம் உருவாவது, எதிர்காலத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறும்.
NEWS EDITOR : RP