இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இஸ்ரோ மையத்தில் பேசிய அவர், “ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும். இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஆதித்யா எல்-1 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்நாளில் இன்னொரு தகவலையும் பகிர விரும்புகிறேன். சந்திரயான்-3 லேண்டர், ரோவரை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளோம். நிலவின் இரவை அவை தாங்கி மீண்டுவரும் என நம்புகிறோம்” என்றார்.தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இத்தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம்” என்று கூறினார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளை உரித்தாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலையும், பிட்ஸ் நிறுவனத்தில் முதுகலையும் படித்தார். 1987-ல் இஸ்ரோவில் பணி கிடைத்தது. கடந்த 36 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார்.
‘ஆதித்யா எல்-1’ குறித்து முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கட்டுரையில் இருந்து: ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் விண்வெளியில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள ‘லக்ராஞ்சியன் புள்ளி எல்-1’ என்னும் இடத்தில்தான் நிலைநிறுத்தப்படுகிறது. இஸ்ரோவிடம் வலிமை குன்றிய ராக்கெட்டுகள்தான் உள்ளன. எனவே, வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் பூமியிலிருந்து புறப்பட்டு, செல்ல வேண்டிய இடத்தை வேகமாகச் சென்றடைய முடியாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ‘கவண்கல் எறிதல்’ நுட்பத்தைப் பயன்படுத்தித்தான் இலக்கை அடையும். இந்த விண்கலம், சுமார் 127 நாள்கள் பயணித்த பின்னரே, தான் நிலைகொள்ள வேண்டிய எல்-1 புள்ளியை அடையும்.பூமிக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது, சூரியனுக்கும் ஈர்ப்பு விசை இருக்கிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நேர்க்கோட்டில் ஏதாவது ஒரு புள்ளியில் இரண்டின் ஈர்ப்பும் சமமாக இருக்கும், இல்லையா? அந்த ஈர்ப்பு விசை சமப்புள்ளிதான் லக்ராஞ்சியன் புள்ளி எல்-1. பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் சூரியனை நோக்கி இந்தப் புள்ளி அமைந்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு 1,510.7 லட்சம் கி.மீ. அதாவது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் நூறில் ஒருபங்கு தொலைவில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படுகிறது.
சூரியனின் இயல்பான இயக்கம் அவ்வப்போது மாறி, சீற்றம் கொள்ளும். சூரியச் சூறாவளி (solar storm), சூரிய ஒளிப்புயல் (solar flash), சூரிய வெடிப்பு (coronal mass ejections) என்கிற மூன்று முக்கியச் சீற்றங்கள் காந்தப்புயலை ஏற்படுத்தி பூமியின் மீது தாக்கம் செலுத்தும். சூரியனின் இயல்பு இயக்கத்தில் வெளிப்புற மண்டலமான கரோனாவிலிருந்து சூரியக் காற்று எனப்படும் காந்தப்புலத்துடன் கலந்த மின்னூட்டம் கொண்ட அயனித் துகள்களின் வீச்சு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தக் காற்று, கோள்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் நொடிக்குச் சுமார் 200 முதல் 400 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.
சூரியன் தன்னைத் தானே சுற்றிக்கொள்வதால் அதன் காந்தப்புலக்கோடுகளில் அவ்வப்போது முறுக்கம் ஏற்படும். குறிப்பிட்ட வரையறையைக் கடக்கும்போது இந்த முறுக்கம் வெட்டிக்கொள்ளும். அப்போது சில வேளை மிக உக்கிரமாக – நொடிக்கு 800 கி.மீ. வேகத்தில் துகள்கள் பாயும். இதுவே சூரியச் சூறாவளி. சில வேளை முறுக்கிய காந்தப்புலக் கோடுகள் வெடித்துப் புதிய இணைப்பைப் பெறும்.
அப்போது பெருமளவில் ஒளி, எக்ஸ் கதிர், காமா கதிர் முதலிய பெரும் ஆற்றலுடன் வெளிப்படும். இதுவே சூரிய ஒளிப்புயல். முறுக்கிய காந்தப் புலம், பால் பொங்குவதுபோலப் பொங்கி சூரியனின் மேற்புறத்தில் எழுந்தால் அதுவே சூரிய எரிமலை வெடிப்பு அல்லது சூரிய நிறை வெளியேற்ற வெடிப்பு (coronal mass ejection). இந்த மூன்று நிகழ்வுகளின்போதும் சூரியக் காற்றின் வேகம் வெகுவாகக் கூடும்; பூமியின் மீது காந்தப் புயல் ஏற்படும்.
விண்கலம் உள்ள பகுதியில் விண்வெளி வானிலையைக் கண்காணிக்கச் சூரியக் காற்று ஆய்வுக் கருவி (Aditya Solar wind Particle Experiment), பிளாஸ்மா துகள் பகுப்பாய்வுக் கருவி (Plasma Analyzer Package for Aditya) முதலியவை உள்ளன. இவை அந்தப் புள்ளியில் சூரியக் காற்றின் வேகம், திசை, மின்னேற்றம் முதலியவற்றை ஆராயும். சூரியப் புயல் அல்லது சூரியச் சூறாவளி கடந்துசெல்கிறதா என அறிய முடியும். மேலும், காந்தப்புல அளவைமானி (Magnetometer) வழியே காந்தப் புயல் ஏற்படுகிறதா எனவும் முன்கூட்டியே அறிய முடியும். இதுவரை அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளிக் கழகம், ஜப்பான், சீனா மட்டுமே சூரியனை ஆய்வுசெய்ய விண்வெளித் தொலைநோக்கிகளை அனுப்பியுள்ளன. இந்த முயற்சி வெற்றியடையும்போது இந்தியா ஐந்தாவது நாடாகும்.
பூமிக்கு அருகே காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்கள், சூரியனிலிருந்து வரும் சூரியக் காற்றின் வேகம் முதலியவற்றை அறிந்துகொள்வதைத்தான் விண்வெளி வானிலை என்கிறார்கள். பல ஆயிரம் செயற்கைக்கோள்கள் பூமியைச் சுற்றிவருகின்றன. எனவே, இன்று விண்வெளி வானிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது செயற்கைக்கோள்கள் பூமியில் தகவல்தொடர்பு, ஜிபிஎஸ் போன்றவற்றைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.சூரியனின் மேற்புற வெப்பம் சுமார் 5,600 டிகிரி செல்சியஸ். ஆனால், அதைத் தாண்டி சூரியனைச் சுற்றிப் படர்ந்துள்ள கரோனா எனும் வளிமண்டலப் பகுதியில் வெப்பநிலை பல லட்சம் டிகிரி செல்சியஸ். விளக்கின் அருகே வெப்பம் கூடுதலாக இருக்கும்; தொலைவு செல்லச் செல்ல வெப்பம் குறையும். சூரியனின் கரோனா மிகமிக உயர் வெப்பநிலையில் அமைந்துள்ளது பெரும் புதிர். இது குறித்தும் ஆதித்யா எல்-1 ஆய்வு நடத்தும்.
NEWS EDITOR : RP