தாயிடம் போதையில் தந்தை தகராறில் ஈடுபடுவதாக கூறி காவல்துறை குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் 13 வயது சிறுவன் மனு கொடுத்தது சமூக ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜாபர் குடித்துவிட்டு வந்து மனைவி பரனாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார். இதனை தடுத்த மகன்களையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டு மனம் உடைந்த பரனா விஷத்தை குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தனது தந்தை ஜாபர் தினமும் குடித்துவிட்டு வந்து தாயாரிடம் தகராறில் ஈடுபட்டு அடித்துக் கொடுமைப் படுத்துவதாகவும் மகன்களையும் அடித்துக் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அவரது 13 வயது மகன் சைக்கிளில் வந்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் நேற்று முன்தினம் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சிறுவனின் தந்தை ஜாபரை அழைத்து அறிவுரைகள் கூறி, குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறு ஈடுபடக்கூடாது எனவும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும் என கூறி அறிவுரை வழங்கினர். மேலும் அந்த சிறுவனிடம் நன்றாக படிக்க வேண்டும் எனவும் இந்த வயதில் வேலைக்கு செல்லக்கூடாது எனவும் அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். காவல்துறை குறைதீர்வு நிகழ்ச்சி இந்நிலையில் நேற்று குடியாத்தம் துணைக்கோட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு வந்த சிறுவன், கூடுதல் வேலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோரிடம் தனது தந்தை குடித்துவிட்டு வந்து தினமும் தோறும் தாயார் மற்றும் பிள்ளைகளிடம் தகராறு ஈடுபடுவது குறித்து கண்ணீர் மல்க கூறினார்.
NEWS EDITOR : RP