காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு செல்வராணி (37) என்ற மனைவியும், தமிழரசி (15) என்ற மகளும், ஓம்பிரசாத், பிரசன்னா என்ற மகன்களும் உள்ளனர். லாரியை வைத்து வாடகைக்கு ஓட்டி வந்த நிலையில் ஸ்ரீதர் மது போதைக்கு அடிமையானதாக தெரிகிறது. இந்த நிலையில் லாரியையும் விற்றுவிட்டார்.
தற்போது கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஸ்ரீதருக்கும் அவரது மனைவி செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.கோபத்துடன் இருந்த ஸ்ரீதர் நேற்று அதிகாலை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மனைவி செல்வராணியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். மனைவி இறந்து விட்டதை அறிந்த ஸ்ரீதர் வெளியே சென்றார். மது போதை தெளிந்த நிலையில் அவசர எண் 100-க்கு போன் செய்து இது குறித்து தெரிவித்தார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு செல்வராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்த விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் ஸ்ரீதரை கைது செய்து சாலவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
NEWS EDITOR : RP