சென்னை சூளைமேடு, வடகரம் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. கடன் அதிகமானதால் சோழிங்கநல்லூரில் உள்ள சகோதரி சாந்தி என்ற கன்னிகா வீட்டில் வசிக்கும் தாயிடம் நகைகளை கேட்டு நேற்று முன்தினம் அங்கு சென்றார். அப்போது நகைகளை தன்னிடம் கொடுக்க வேண்டி தாயை கையெழுத்து போடுமாறும், இல்லையெனில் தீக்குளித்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
இதில் அவருக்கு தலை, மார்பு, தொடை ஆகிய பகுதிகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை அடைக்க தாயிடம் நகை கேட்டு தகராறு செய்து வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
NEWS EDITOR : RP