நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ’இஸ்ரோ’ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலமானது, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் கால்பதிக்கும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதையடுத்து இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக ’ஆதித்யா எல்1’ திட்டம் அமைய உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம், அதிலிருந்து வெளிவரும் காந்த புயல் தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது.
இன்றைய காலங்களில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும், இந்த ஆதித்யா எல்1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. சூரியனை ஆய்வு செய்ய ’ஆதித்யா-எல்1’ விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படும் என்றும், பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ’ஆதித்யா-L1’ விண்கலம் ஏவப்படும் என்றும் இஸ்ரோ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இது தான்.
NEWS EDITOR : RP