கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் உலகபுகழ்பெற்ற
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு மாதாவை தரிசனம் செய்வதற்காக குவிந்து வருகின்றனர்.
பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், நடுத்திட்டு, மாதாகுளம், பழைய வேளாங்கண்ணி மாதா கோயில், வீண்மீன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகிறது.
மேலும் கொடியேற்றத்தை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நடைப்பயணமாக வேளாங்கண்ணியை நோக்கி வரும் நிலையில், ஏராளமானோர் சிறிய சப்பரங்களை மின் விளக்கு அலங்காரத்துடன் வடிவமைத்து அவற்றில் மாதா சொரூபத்தை வைத்து பிரார்த்தனை செய்தவாறு விடிய விடிய இழுத்து வருகின்றனர். நாளை மாலை 5 மணிக்கு கொடியேற்றமும் வரும் 7-ம் தேதி பெரிய தேர் பவனையும் நடைபெற உள்ளது.குறிப்பாக வேளாங்கண்ணி பேராலய கோபுரங்களில் அனைத்திலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு, அழகுற ஒளிர்வது காண்போர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.
NEWS EDITOR : RP