ஜப்பான் நாட்டின் தென்மேற்கே ககோஷிமா மாகாணத்தில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்வதற்காக எச்.2.ஏ. ராக்கெட் ஏவும் திட்டம் தயாராக இருந்தது.
இந்த ராக்கெட் இன்று காலை 9.26 மணியளவில் ஏவ திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், சாதகமற்ற வானிலையால் இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் சார்பில் இந்த நிலவு பயண திட்டம் உருவாக்கப்பட்டது. நிலவை ஆய்வு செய்வதற்காக லேண்டரை தரையிறக்கும் இந்த நிகழ்வுக்கு ஸ்லிம் என பெயரிடப்பட்டது.
இந்த திட்டம் வெற்றி பெற்றால், நிலவை ஆய்வு செய்வதற்கான திட்டத்தில் வெற்றி பெற்ற உலகின் 5-வது நாடாக ஜப்பான் திகழும். ஜப்பானின் இந்த ஆய்வு பணிகளில் சேகரிக்கப்படும் தரவுகள், அமெரிக்கா தலைமையிலான ஆர்டெமிஸ் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்புவது என்ற நோக்கம் செயல்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், கடந்த 23-ந்தேதி நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது. அதன் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
NEWS EDITOR : RP