சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு மும்பையில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாலமோன் மாட்டின் லூதர் (வயது 47) என்பவர் பயணம் செய்தார். இவர் விமானம் தரையிறங்கியதும் நடைமேடை வழியாக தரைத்தளத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட சக பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பயணி சாலமோனை பரிசோதித்தனர். அப்போது அவர், மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னை விமான நிலைய போலீசார் சாலமோன் மார்ட்டின் லூதர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், ஆந்திராவை சேர்ந்த மார்ட்டின் லூதர் தென்னாப்பிரிக்கா நாட்டில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்வதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வழியாக சென்னை வந்து உள்ளார்.
NEWS EDITOR : RP