‘கற்பனை’ உலகம் ஒன்றில் நடக்கும் காதல் கதையின் முடிவு ‘ரியாலிட்டி’யை நம்பியிருந்தால் அது “அடியே”..!!

Spread the love

பள்ளிக் காலத்திலிருந்து கவுரி கிஷனை காதலிக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். அவர் தனது காதலை வெளிப்படுத்தும் போதெல்லாம் எதோ ஒரு பிரச்சினை குறுக்கிட்டுவிட, காதல் கரையைக் கடக்காமல் தவிக்கிறது. அப்படி ஒருநாள் கவுரியிடம் காதலை சொல்ல முயலும் ஜி.வி விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் கவுரியும், ஜிவியும் தம்பதியர்களாக வாழ்கின்றனர்.

தான் மல்டி யுனிவர்ஸுக்குள் வந்ததை அறியாத அவர், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை புரிந்துவிடுகிறது. பின்னர் நிஜ உலக ஒருதலைக் காதல் ஒருபுறமும், கற்பனை உலக திருமண வாழ்க்கை மறுபுறமுமாய் விரிய, இறுதியில் கற்பனை உலகம் காலாவதியானால் என்ன நடக்கும் என்பது படத்தின் திரைக்கதை.

‘இரண்டாம் உலகம்’ படத்துக்குப் பிறகு, ‘மல்டி யுனிவர்ஸ்’, ‘ஆல்டர்நேட் ரியாலிட்டி’யை பயன்படுத்தி தமிழில் வெளியாகியிருக்கிறது ஒரு காதல் கதை. கற்பனை உலகில் கனவுகளுக்கு உயிர்கொடுப்பது என்பது உண்மையில் சுவாரஸ்யமான ஐடியா. அதனை தமிழ் சினிமாவை கலாய்க்க பயன்படுத்தியிருப்பது படத்துக்கு பெரும் பலம் சேர்க்கிறது.

விஜய்யின் ‘போகன்’ பட காட்சி, இசையமைப்பாளர்களான பயில்வான் ரங்கநாதன், பிரபு தேவா, ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம், தனுஷ் ரசிகராக வரும் ‘கூல்’ சுரேஷ், தெலுங்கு இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், இந்திய கிரிக்கெட் அணியின் கோச் மணிரத்னம், ‘அலைபாயுதே’ பட லவ் புரபோசல் காட்சியை மறு ஆக்கம் செய்திருந்து… இப்படியான காட்சிகள் ரசிக்க வைப்பதுடன் சிரிப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

‘சார் நான் காலுல வாழ்றவன்’ என கவுதம் வாசுதேவ் மேனனுக்கு வைத்த இன்ட்ரோ மிரட்டல். டூத்பேஸ்டூக்கு ‘பகாடி’ பெயர் வைத்தது, தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டு ‘தமிழ் திணிப்புக்கு’ பிரதமர் விஜயகாந்த் எதிர்ப்பு, ஆர்சிபி கேப்டன் தோனி, ‘கோமாளி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் நடன இயக்குநர் என ‘ஆர்டர்நேட் ரியாலிட்டி’யை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

ஆனால், இந்த சுவாரஸ்யமான கற்பனை உலகத்திலிருந்து வெளியேறும்போது ஆக்சிஜன் தேவைப்படும் அளவுக்கு அயற்சி தொற்றிக்கொள்கிறது படத்தின் பிரச்சினை. டி.ராஜேந்தரின் கால ஒருதலைக் காதல் கதையை மீண்டும் மல்டி யுனிவர்ஸுக்குள்ளும் புகுத்தி எழுதியிருப்பது சலிப்பு. மல்டி யுனிவர்ஸ் ரேஞ்சுக்கான யோசனை இருந்தும் அங்கேயும் காதல் கதை தானா மையமா?

‘96’ பட பாணியில் ஸ்கூல் கதையில் கவுரி கிஷனின் பாடல் காட்சி, வெங்கட்பிரபுவை வைத்துக்கொண்டே ‘மாநாடு’ பட டைம் ட்ராவல் இன்ஸ்பிரேஷன் பார்த்து பழகியவை. மல்டி யுனிவர்ஸில் மற்ற எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், கவுரி கிஷனுக்கு மட்டும் ஏன் இரண்டு உலகிலும் ஒரே பெயர் பயன்படுத்தபடுகிறது என தெரியவில்லை. லாஜிக் பார்க்கக் கூடாது என தவிர்த்தாலும் இந்தக் கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

காதலை சொல்லும் போராட்டம், விரக்தி, புது உலகுக்குள் நுழையும்போது அதிர்ச்சி கலந்த குழப்பம் என நடிப்பில் கவனம் பெறுகிறார் ஜி.வி.பிரகாஷ். ஆனால், சில எமோஷனல் காட்சிகளில் இன்னும் கூட மெனக்கெட்டிருக்கலாமோ என தோன்றுகிறது. கவுரி கிஷன் தனது முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பிலும் முன்னேறியிருக்கிறார். காட்சிக்கு தேவையான உணர்வுகளை முகத்தில் கச்சிதமாக கடத்தி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார்.

இவர்களை தவிர்த்து, வெங்கட்பிரபு, ஆர்ஜே விஜய், மதும்மகேஷ், சுவேதா வேணுகோபால் கொடுத்த வேலையை செய்துள்ளனர். கோகுல் பினாயின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு கவர்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி இசை படத்தின் தரத்தை கூட்டுகிறது. யுவன் சங்கர் ராஜா குரலில் வரும் பாடல் ஒன்றும் ரசிக்க வைக்கிறது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram