2D நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இப்படம் முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்வின் நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்திலும், மணிகண்டன் ராஜாகண்ணு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் சில விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் குறவர் சமூகத்தினரை இழிவுபடுத்தியதாக கூறி ஜெய் பீம் படக் குழுவினருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. குறவர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். அவர் தனது மனுவில் குறவர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2021ல் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை, எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் எழும்பூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகேசன் வழக்கு தொடர்ந்தார். அதில் குறவர் சமூகத்தை தவறாக சித்தரித்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா மீதும், இயக்குநர் த.செ.ஞானவேல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் இருவரையும் எதிர்மனுதாரர்களாக இணைக்கும்படி நீதிபதி ஆர்.ஹேமலதா உத்தரவிட்டிருந்தார்.
NEWS EDITOR : RP