தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பரபரப்பு நிறைந்த போக்குவரத்து சந்திப்பு பகுதிகளில் பிச்சையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். விபத்துகள் ஏற்படும் சூழலும் காணப்பட்டது.
இதனை கட்டுப்படுத்த கமிஷனர் (மேற்கு மண்டலம்) தலைமையில் ஐதராபாத் போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் பல திடுக்கிடும் விசயங்கள் தெரிய வந்தன.
இதுபோன்று, குழந்தைகளை அருகேயுள்ள சேரி பகுதிகளில் இருந்து வாடகைக்கு எடுத்து, அவர்களை பிச்சை எடுக்க வைத்து பணம் சேர்க்கும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வந்துள்ளது.
இந்த வழக்கில் 8 குழந்தைகள் உள்பட 23 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் சில சிறுவர்கள் மற்றும் சூரிய பிரகாஷ் என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். பிரகாஷ் முன்னாள் புகைப்படக்காரர் ஆவார். அவருக்கு வருவாய் போதவில்லை என்பதற்காக இந்த தொழிலில் ஈடுபட திட்டமிட்டார். அவர்களை பேருந்து நிறுத்தம் மற்றும் அருகேயுள்ள வணிக வளாக பகுதிகளில் பிச்சை எடுக்க வைத்துள்ளார்.
இதன்படி, பிச்சைக்காரர்கள் நாளொன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை பணம் ஈட்டியுள்ளனர். மொத்தத்தில், மாதம் ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை பணம் சேர்ந்துள்ளது என போலீசார் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. பிரகாஷ், பிச்சை எடுக்க சிறுவர்களிடம் ஸ்டீலால் ஆன பெட்டிகளை கொடுப்பது வழக்கம். அதில் கியூஆர் குறியீடுகள் இருக்கும். அது பிரகாஷின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். அந்த சிறுவர்களுக்கு தினசரி ரூ.200 கொடுப்பார்.
NEWS EDITOR : RP