தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை செய்துவருகிறார். இவர் கடந்த 18-ம் தேதி நிறுவனத்தின் பணம் ரூ.15லட்சத்தை எடுத்துக்கொண்டு, தனது இருசக்கரவாகனத்தில் மடுவாங்கரை மசூதி காலனியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் சோமசுந்தரத்தை வழிமறித்து தாக்கி, அவரிடம் இருந்த ரூ.15 லட்சம் பணத்தை பறித்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர் கிண்டி போலீஸில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சோமசுந்தரத்திடம் வழிப்பறி செய்தது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் கார் ஓட்டுநராக வேலை செய்யும் முகமது ரசிக் (28) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், நிறுவனத்தில் இருந்து சோமசுந்தரம் பணம் எடுத்துச் செல்வதை அறிந்து, அவரை பின்தொடர்ந்து, தனது நண்பர்கள் மூலம் அந்த பணத்தை முகமது ரசிக் வழிப்பறி செய்தது தெரிந்தது.
NEWS EDITOR : RP