2022 தொடக்கத்தில் உலகம் முழுக்க கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட போது சர்வதேச மருத்துவர்கள் தொடங்கி பில் கேட்ஸ் வரை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர்.
அதில் மீண்டும் பெருந்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர். உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கொரோனா பெருந்தொற்று மட்டுமல்லாது கண்டிப்பாக ஏதாவது ஒரு நோயின், வைரஸின் பெருந்தொற்று மீண்டும் உலகம் முழுக்க ஏற்படும்.
இதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் கொரோனாவில் உருவாகி இருக்கும் புதிய மாதிரி ஒன்றை பற்றி உலக சுகாதார மையம் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது. இந்த கொரோனா மாதிரி உலக நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மிக அதிக அளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா இது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த உருமாற்ற வகைக்கு BA.2.86 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது கொரோனாவிற்கு பின் பிஏ டிகிரி போல.. BA.2.86 என்று சேர்த்து உள்ளனர்.
அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த BA.2.86 வகை கொரோனா பதிவாகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவின் BA.2.86, வகை வேகமாக பரவுகிறது. இது மிக அதிக அளவில் உருமாற்றம் அடைந்த கொரோனா வகை ஆகும்.
இதனால் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும். எப்போதும் இருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு வழிமுறைகள் இதற்கும் பொருந்தும் என்று அமெரிக்காவின் சுகாதார அமைப்பான சிடிசி தெரிவித்துள்ளது. இந்த BA.2.86, கொரோனா அதிக அளவில் உருமாற்றம் அடைந்து உள்ளது. அதனால் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
ஒரு சில நாடுகளில் மட்டுமே இந்த கொரோனாவின் BA.2.86 வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனால் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால் இதன் உருமாற்ற எண்ணிக்கை அதிர்ச்சி கொடுப்பதாக உலக சுகாதார மைய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த கொரோனா BA.2.86, வகையில் மொத்தமாக 36 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே தீவிரமாக பரவி வந்த கொரோனா XXB.1.5 வகையில் இத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு இந்த புதிய வகை BA.2.86 உருமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனாவின் தொடக்க காலத்தில் இருந்த வைரஸ் போன்ற கிளை அமைப்புகளை இந்த புதிய வகை கொரோனா கொண்டு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. BA.2.86 கொரோனா வேகமாக பரவுமா என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது. அதன் சக்தி எவ்வளவு, எது எவ்வளவு வேகமாக பரவும், மரணம் ஏற்படுமா, வேக்சின் எதிர்ப்பு சக்தி இருக்குமா என்பதை பற்றி எல்லாம் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
NEWS EDITOR : RP