ட்விட்டரில் (எக்ஸ்) ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்..!!

Spread the love

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி இருந்தார். வாங்கிய சில நாட்களிலேயே ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை இஷ்டத்துக்கு மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பெற சந்தா கட்டணத்தை அறிவித்தார். அண்மையில் ட்விட்டர் தளத்தின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றி இருந்தார். சந்தா கட்டணம் செலுத்திய கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு பகுதியை வழங்கும் விதமாக விளம்பர வருவாய் பகிர்வு திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தார்.

அந்த வகையில் தற்போது இன்னொரு மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளாக் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய இயலும். அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது. இது எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, ப்ளாக்கிங் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும். இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பயனர்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் தாக்குதல்களை ஃபில்டர் செய்யும் வசதிகளை செயலிகள் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும். இந்த வசதியை நீக்குவதால் பின்னூட்டங்களில் வரும் வசைச் சொற்களையும், ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கெனவே ப்ளாக் செய்யப்பட்ட பயனர்களின் கணக்குகளும் தானாகவே அன்ப்ளாக் ஆகுமா என்பது குறித்து இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram