அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்கா மட்டும் இன்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
வடகொரியாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக அந்நாடு மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா அடங்கியபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில், தென்கொரிய அதிபர், ஜப்பான் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச உள்ளார். தென்கொரியாவும் அமெரிக்காவும் திங்கள் கிழமை முதல் 11 நாள் ராணுவ பயிற்சியிலும் ஈடுபட உள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை போர் விமானங்களை கொண்டு விரட்டியடித்ததாகவும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாடுக்கு முன்பாக வடகொரியா, முன் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
NEWS EDITOR : RP