“கச்சத்தீவு விவகாரத்தில் துரோகம் செய்தது அதிமுக தான்..!!” ~ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

கச்சத்தீவு என்பது இலங்கை அரசுக்கு உட்பட்ட தீவாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. டச்சு, போர்த்துகீசிய மன்னர் காலத்து வரைபடங்கள் கூட அப்படித்தான் சொல்கின்றன. 1954-இல் இலங்கை என்று வெளியிட்ட வரைபடத்திலும் கச்சத்தீவு அவர்களுடையது என்று சொல்லப்படவில்லை.

கச்சத்தீவுக்கு செல்லும் பாதையிலும், கச்சத்தீவின் மேற்குப்பகுதிக் கரை ஓரத்திலும் சங்கு எடுக்கும் உரிமை ராமநாதபுரம் ராஜாவுக்கு தான் இருந்தது என்பதைக் காட்ட ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அங்கு சங்கு எடுத்ததற்காக, அவர் எந்தக் காலத்திலும் இலங்கை அரசுக்குக் கப்பம்கூட கட்டியது கிடையாது.

எனவே கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை எந்த சர்வதேச நீதிமன்றத்திலும் நிரூபிக்க முடியும் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி இந்திய அரசுக்கு கொடுத்ததே நம்முடைய கருணாநிதிதான்.

1971-ஆம் ஆண்டு இலங்கை அரசு கச்சத்தீவை சொந்தம் கொண்டாடியதுமே அன்றைய முதல்வர் கருணாநிதி கச்சத்தீவு நம்முடைய அரசுரிமை என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்கு சட்டப்பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமிக்கு உத்தரவிட்டார். கச்சத்தீவானது, இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்பதற்கான அறிக்கையை 1973 டிசம்பரில் கருணாநிதி வெளியிட்டார். அதை மீறித்தான் 1974 ஜூன் 26-ஆம் நாள் கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய – இலங்கை பிரதமர்களால் போடப்பட்டது. இது ஒப்பந்தம்தானே தவிர சட்டம் அல்ல! நல்லா கவனியுங்கள், அப்படி எந்தச் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதைத் திமுகவும் ஆதரிக்கவில்லை.

உடனடியாக, டெல்லி சென்று பிரதமர் இந்திரா காந்தியை முதல்வர் கருணாநிதி சந்தித்தார். கச்சத்தீவை தரக்கூடாது என்று வலியுறுத்தினார். கச்சத்தீவு நமக்குச் சொந்தம் என்பதற்கான ஆதாரங்களை கருணாநிதி பிரதமரிடம் கொடுத்தார். அன்றைய சட்ட அமைச்சர் மாதவனும் முதல்வரோடு உடன் சென்றார். சென்னை திரும்பியதும் இதே ஆதாரங்களை வைத்து மறுபடியும் கருணாநிதி கடிதம் எழுதினார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரண் சிங், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் ஆகியோரை சந்தித்து இந்த ஆதாரங்கள முதல்வர் கருணாநிதி கொடுத்திருக்கிறார். “இலங்கைக்குக் கச்சத்தீவை தாரை வார்த்ததன் மூலமாக இந்தியாவுக்கு அல்ல, தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து” என்று இதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் முழங்கினார்.

திமுக உறுப்பினராக இருந்த இரா.செழியன் நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். வெளிநடப்பு செய்திருக்கிறார். ஒப்பந்தம் கையெழுத்தான மூன்றாவது நாளே. அதாவது 29.6.1974 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டினார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தாகவேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான். அன்று முதல் இன்று வரை ஒரே ஒரு விஷயத்தை தெளிவாக செய்கிறார்கள். அது என்னவென்றால், தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்வது!

21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தார் கருணாநிதி. கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக கண்டனக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்டது. ஜூலை 14-ஆம் தேதி தொடங்கி 45 முக்கிய நகரங்களில் இந்தக் கூட்டங்களை நடத்துவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

தஞ்சையில் கருணாநிதி, சென்னையில் பேராசிரியர், அப்போது திருப்பெரும்புதூரில் நான்தான் பேசினேன். இந்த வரலாறு எதுவும் தெரியாமல் மாநில அரசான திமுக இந்தியாவோட ஒரு பகுதியை தாரை வார்த்தது என்று அடிப்படை அறிவும் இல்லாமல், குறைந்தபட்ச நேர்மையும் இல்லாமல், சிலர் பேசி வருவது வெட்கக்கேடானது! கண்டிக்கத்தக்கது! கச்சத்தீவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மறுப்பதாகும்.

எனவே இந்திய அரசு, இலங்கை அரசுடன் போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும் போதெல்லாம் அவரிடம் இந்த கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். ஏன் கடந்த வாரம் இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வந்தபோது கூட ஜூலை 19 ஆம் தேதி பிரதமருக்கு இது தொடர்பாக நான் கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், இங்கே இருக்கக்கூடிய சிலர் என்ன சொல்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் திமுக ஆட்சிக்காலத்தில்தான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என்று வரலாறு தெரியாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.கச்சத்தீவை மீட்டெடுத்து – தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்போம்! மீனவர்களின் நலனை காப்பதாக என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும். எனவே, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அப்படித்தான் செயல்படுவான் என்ற உறுதியை கூறிக் கொண்டு, அதற்கு மீனவ சமுதாயம் எப்போதும்போல எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

எனவே, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு இப்போதாவது தொடங்க வேண்டும். பாஜக அரசு இந்த முயற்சியில் இறங்கவில்லை என்றால், அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும் புதிய அரசு இதனை நிறைவேற்றும் வகையில் நமது அரசியல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram