மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.8,000 ஆக உயர்வு..!!

Spread the love

 “இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்த மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளை மீனவர் நல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இவ்விழாவில் 14,000 பயனாளிகளுக்கு 88 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “நமது மீனவர்கள் எதிர்பார்த்து வரும் சில முக்கியமான அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.

  • மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்.
  • 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.
  • மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையில், சொன்ன முக்கியமான அறிவிப்பு இது. இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
  • 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
  • தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
  • மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
  • தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம்.பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. மீன் பிடிக்கையில் காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத் தொகையானது 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். 

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram