திருப்பதி திருமலைக்கு அலிப்பிரிவழி நடைபாதையில் பாதயாத்திரையாக தினேஷ் என்பவர் குடும்பத்தினருடன் கடந்த 11ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது அவரது மகள் லட்சிதா திடீரென மாயமானார். அவரை சிறுத்தை இழுத்துசென்றது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுமியை தேட தொடங்கினர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுமியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் இரவு நேரத்தில் பெற்றோருடன் நடந்து சென்ற மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கி வனப்பகுதியில் இழுத்து சென்றது. அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒளி வெள்ளத்தை பாய்ச்சும் ராட்சத விளக்கை திடீரென்று ஒளிர விட்டதால் சிறுத்தை அந்த சிறுவனை விட்டு சென்றது.
படுகாயம் அடைந்த சிறுவனை மீட்ட போலீசார், சிறுவனை திருப்பதியில் உள்ள தேவஸ்தான குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதனையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருப்பதி மலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூண்டுகளை அமைத்துள்ளனர். அந்த கூண்டில் ஜூலை மாதம் 22 ஆம் தேதி ஒரு சிறுத்தை சிக்கிய நிலையில் கடந்த 14ஆம் தேதி மற்றொரு பெண் சிறுத்தை சிக்கியது.
இந்த நிலையில் நேற்று இரவு மூன்றாவதாக சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது.
சிறுத்தை பொறியில் சிக்கியது பற்றிய தகவல் அறிந்த வனத்துறையினர், இரவு நேரம் என்பதால் அங்கு செல்வதை தவிர்த்தனர். ஒரு சிறுத்தை கூண்டில் சிக்கி கொண்டால் அதன் ஜோடி சிறுத்தை அதே பகுதியில் ஆக்ரோஷமாக சுற்றி கொண்டிருக்கும். அந்த நேரத்தில் யாராவது அங்கு சென்றால் கொடூரமான தாக்குதலை மேற்கொள்ளும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP