சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் மூன்றாவது முறையாக சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுகிறேன். அனைத்து மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் – விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. விடுதலை நாளன்று தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடிரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம்.
நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் வரும் 25-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்
மக்களிடம் நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப்பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும்.
திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சி முறை இந்தியா முழுமைக்குப் பரவுமானால், அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது. மாநிலங்கள் ஒன்றிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம் – மொழி – மதம் பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும்.
ஒற்றுமையால் கிடைத்த விடுதலையை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.
சமூகநீதி – சமத்துவம் – சகோதரத்துவம்-சமதர்மம் – மதச்சார்பின்மை – ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பதுதான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
NEWS EDITOR : RP