ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ~ உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!

Spread the love

போனஸ் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டுவதாக தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார் அவர் வாதாடியதாவது: இந்த வழக்கை ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் தொடரவில்லை. மாறாக, அந்த சூதாட்ட விளையாட்டுகளை நடத்தும் ஆன்லைன் நிறுவனங்கள்தான் தொடர்ந்துள்ளன. கிளப்களுக்கு வெளியே ரம்மி விளையாடுவதற்கு தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆன்லைனில் 24 மணி நேரமும் ரம்மி விளையாட முடியும். குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் விளையாடக் கூடாது என எந்த நேரக்கட்டுப்பாடும் விதிக்க முடியாது. இதை முறைப்படுத்தவும் இயலாது. ரூ.5 ஆயிரம் செலுத்தி விளையாடினால் ரூ. 5,250 வழங்குகின்றனர். இது நேரடியாக விளையாடும்போது நடக்காது. ஒரு நண்பரை சேர்த்துவிட்டால் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்குகின்றனர். இதேபோல வேறு ஏதேனும் திறமையான விளையாட்டுகளுக்கு வழங்குகிறார்களா என்றால் இல்லை.

போனஸ் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை சம்பாதித்து வருகின்றன. வழக்கமான ரம்மி விளையாட்டைவிட இது முழுக்க, முழுக்க மோசமானது என்பதால்தான், இந்த சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு தடை சட்டம் கொண்டு வந்துள்ளது.

இது திறமைக்கான விளையாட்டு அல்ல. ஆன்லைன் நிறுவனங்கள் மக்களை சுரண்டி சூதாட்டத்தில் ஈடுபடுவது என்பது அடிப்படை உரிமையல்ல என்பதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 17-ம்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை அனுமதித்தால், இதேநடைமுறை எல்லா விளையாட்டுகளிலும் புகுந்துவிடும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி, பொது ஒழுங்கைப் பாதித்து விடும் என்பதாலும், சிறுவர்களின் நலனைக் கருத்தில்கொண்டும் ஆன்லைன் ரம்மிபோன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து சட்டம் இயற்ற, தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram