ஈரோடு மஞ்சள் சந்தையில், மஞ்சள் விலை நேற்று அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது.
ஈரோடு மஞ்சள் சந்தையில் கடந்த மாதம் முதல் மஞ்சள் விலை உயரத் தொடங்கியது. கடந்த மாதம், 21-ம் தேதி ஒரு குவிண்டால் ரூ.14 ஆயிரத்து 899-க்கு விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக 14 ஆயிரத்தில் இருந்து மஞ்சள் விலை குறையாததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல், கிழங்கு மஞ்சளின் விலையும் குவிண்டால் ரூ.14 ஆயிரத்தைக் கடந்ததது. இந்நிலையில் ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானது.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடதுக்கு 2,015 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 1,676 மூட்டை மஞ்சள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,889 முதல் ரூ.15 ஆயிரத்து 359, கிழங்கு மஞ்சள் ரூ.9,699 முதல் ரூ.14 ஆயிரத்து 379 வரை விற்பனையானது.
ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 1,877 மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 1,411 மூட்டை விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,899 முதல் ரூ.14,799, கிழங்கு மஞ்சள் ரூ.9,099 முதல் ரூ.14,459 வரை விற்பனையானது. கோபி கூட்டுறவு சங்கத்தில், 128 மூட்டை மஞ்சள் விற்பனையானது. இங்கு விரலி மஞ்சள் ரூ.11,609 முதல் ரூ.15,422, கிழங்கு மஞ்சள் ரூ.12,199 முதல் ரூ.14,599 வரை விற்பனையானது
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 6,237மூட்டை மஞ்சள் வரத்தான நிலையில், 2012 மூட்டை மஞ்சள் விற்பனையானது. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,069 முதல் ரூ.15,409, கிழங்கு மஞ்சள் ரூ.8,500 முதல் ரூ.14,669 வரை விற்பனையானது.
NEWS EDITOR : RP