நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
NEWS EDITOR : RP